Published : 05 Oct 2021 03:13 AM
Last Updated : 05 Oct 2021 03:13 AM

தமிழக அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை பாஜக ஆதரிக்கும் : மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் நலனுக்கான திட்டங்களை பாஜக ஆதரிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரனின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரது சிலைக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனாவை கட்டுப்படுத்துவதில், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது . நாடு முழுவதும் 89 கோடியும், தமிழகத்தில் 4.6 கோடியும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை பாஜக ஆதரிக்கும்.

தியாகி குமரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து அரசிடம் ஒப்படைக்க தாமதமாகிறது. இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் சார்பில் மணி மண்டபம் கட்டப்படும். அதே போல், காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கித்தந்தால், அவரது நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசின் சார்பில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு நடக்காது என்று நாடகம் போடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் . 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அரசு கொங்கு மண்டலத்தை திட்டமிட்டு புறக்கணிப்பது போல தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடந்தால் ஜனநாயகம் வெல்லும். மத்திய அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் உள்ளாட்சிகளுக்கு போய் சேர்ந்துள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x