Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM

ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு - ஜவ்வாதுமலையில் நிரந்தர கட்டிடம் கட்ட கோரிக்கை : தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மலைவாழ் மக்கள் மனு

ஜவ்வாதுமலையில் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு நிரந்தர கட்டிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளிக்க வந்த மலைவாழ் மக்கள்.

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் செயல்படும் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக்கு ஜவ்வாதுமலையில் நிரந்தர கட்டிட வசதியை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலை மலைவாழ் மக்கள் நலச்சங்கம் சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மலைவாழ் மக்கள் அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி அத்திப்பட்டு கிராமத்தில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 420 மாணவர்கள் படிக்கின்றனர். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்துக்கு கூலி வேலைக்கு மலைவாழ் மக்கள் செல்லும்போது, பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்து சென்றதால், அவர்களது கல்வி பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளியில்தங்கி படிக்கும்போது, பிள்ளைகளின் கல்வி பாதிக்கப் படாமல் உள்ளது. எனவே, மலைவாழ் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மாணவர்கள் 100 சதவீதம் கல்வியில் வளர்ச்சி பெற்று, உயர் கல்வி கற்க வேண்டும். அதற்கு, அத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக்கு நிரந்தரமாக கட்டிட வசதியை ஜவ்வாது மலையில் ஏற்படுத்தி கொடுத்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித் துள்ளார்.

யூரியா தட்டுப்பாடு

உழவர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் அளித்துள்ள மனுவில், “தி.மலை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சம்பா நெல் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. இதனால் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யூரியா தேவையில் 27 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி குறைந் துள்ளது. இதனால் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு மாற்றாக திரவ யூரியாவை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, திட யூரியாவை கொள்முதல் செய்து கடைகளுக்கு வழங்கினால்தான், உணவு உற்பத்தி பெருகும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x