Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை வாக்குப்பதிவு - சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம் :

திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சசிகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அடுத்த படம்: ஜோலார்பேட்டை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மோகன்ராஜ் முருகர் வேடமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். படங்கள்: ந.சரவணன்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடும் சுயேட்சை வேட் பாளர் ஒருவர் முருகர் வேடமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான முதற்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத் துக்காக வந்த வெளியூர் நபர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று காலை முதல் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் பதவி, ஒன்றியம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் தங்களது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று பல்வேறு யுக்திகளை கையாண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, கந்திலி மற்றும் நாட்றாம்பள்ளி ஆகிய 4 ஒன்றியங்களில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று களை கட்டியது. கிராமப்பகுதிகளில் பேண்டு, வாத்தியங்கள் முழங்க, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முருகர் வேடம்

இந்நிலையில், ஜோலார் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் அதேபகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ்(23) என்பவர், தமிழ் கடவுள் முருகரை போல வேடமிட்டு, வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் தனது சின்னத்தை காட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஒரு சில இடங்களில் வாக்கு சேகரிப்புக்காக முருகர் வேடத்தில் சென்ற மோகன்ராஜூக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து, கற்பூரம் காட்டி, முருகரே நேரில் வந்து ஓட்டு கேட்பதை போல உள்ளது எனக் கூறி மோகன்ராஜூக்கு ஆதரவு தெரிவித்தனர். மோகன்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்த போதும் முருகர் வேடம் அணிந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து வரி கட்டுவேன்

அதேபோல, திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி யிடும் சுயேட்சை வேட்பாளர் சசிகுமார்(42) என்பவர் இந்த தேர்தலில் தான் வெற்றிபெற்று ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால், தாதனவலசை ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட வரி இனங்களை தன் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x