Published : 04 Oct 2021 03:11 AM
Last Updated : 04 Oct 2021 03:11 AM
தொடர் மழை காரணமாக மாநகரில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வெங்காயம், தக்காளி, அவரைக்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் வருகின்றன. தவிர, ஊட்டியிலிருந்து உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிகளவில் வருகின்றன. கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் பரவலாகவும், வெளிமாநிலங்களிலும் பெய்யும் தொடர் மழை காரணமாக எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.60-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.50-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.30-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.25-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.40-க்கும் நேற்று விற்கப்பட்டன.
இதேபோல, ரூ.25-க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் 4 கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரம் ரூ.400-க்கு விற்கப்பட்ட100 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை தற்போது ரூ.600 முதல் விற்கப்படுகிறது.
கடைகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்யும்போது இந்த விலையிலிருந்து மேலும் ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். மார்க்கெட் வியாபாரிகளிடம் கேட்டபோது, “கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக காய்கறிகள் வரும்போது அழுகி விடுகின்றன. வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதே நிலை தான் பிற மார்க்கெட்டுகளிலும் நிலவுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT