Last Updated : 01 Oct, 2021 03:19 AM

 

Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

மேட்டூர் அணை நீரில் மீண்டும் படரும் பாசிப்படலம் : நிரந்தர தீர்வுக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் கடந்த ஆண்டைப்போல மீண்டும் பாசிப்படலம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேட்டூர் அணையின் முழுக்கொள்ளளவான 120 அடி உயரத்துக்கு நீர் நிரம்பும்போது, 59.29 சதுர மைல் பரப்புக்கு தண்ணீர் தேங்கி, கடல்போல காட்சியளிக்கும். அணையில் தற்போது, 73.06 அடி நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், நீர் தேக்கப்பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதி நீரில் திட்டுதிட்டாக துர்நாற்றத்துடன் கூடிய பாசிப்படலம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

துர்நாற்றம்

கடந்த ஆண்டும் இதேபோல பாசிப்படலம் ஏற்பட்டு அணை மதகு வரை பரவியது. மேலும், பாசிப்படலத்தால் துர்நாற்றம் வீசியது. இதனால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை இணைந்து அணை நீரில் நுண்ணுயிர் கரைசலைத் தெளித்து பாசிப்படலத்தை கட்டுப்படுத்தினர். இந்நிலையில், தற்போதும் பாசிப்படலம் ஏற்பட்டிருப்பது பொதுப்பணித் துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பாசிப்படலம் நீரில் மீண்டும் மீண்டும் பரவாமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆய்வும்..தகவலும்...

இதுதொடர்பாக அணை உதவி பொறியாளர் மதுசூதன் கூறியதாவது:

அணைக்கு வரும் நீரில் கழிவுகள் ஏதேனும் கலந்திருக்கிறதா என்பது தொடர்பாக கடந்தாண்டு ஆய்வு செய்தபோது, பிலிகுண்டுலு, ஒகேனக்கல் ஆகிய இடங்களில் சுத்தமான நீரோட்டம் இருப்பதும், மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதிகளில் தான் பாசிப்படலம் ஏற்படுவதும் தெரியவந்தது.

அணை கரையோரங்களில் பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் தண்ணீரில் மூழ்கும்போது நிலத்தில் உள்ள பயிர்களின் எச்சம், பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்களின் எச்சத்தால் பாசிப்படலமும், துர்நாற்றமும் ஏற்பட காரணம் என தெரிந்தது.

இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய சங்கம் மூலம் அணை நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நுண்ணுயிர் கரைசல் தெளிக்கப்பட்டு பாசிப்படலம் கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது, நீர்தேக்கப் பரப்பின் கரையோரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சாகுபடியால், பயிர்களின் எச்சங்கள் மழைநீரில் கலந்து பாசிப்படலம் பரவ அதிக வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x