

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்துள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்தார். சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் சுற்றுலா மையத்தை கூடுதல் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து களஆய்வு செய்தார். படகில் சென்று கழிமுக ஆற்றுப் பகுதியில் உள்ள திட்டில்
உள்ள சுற்றுலா மையத்துக்கு சொந்தமான கட்டிடங்களை பார்வையிட்டார். பின்னர் படகு சவாரி செய்தபடி சுரபுன்னை காடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து படகு குழாம், உயர்கோபுரம், அறைகள், கழிவறைகள், பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பிச்சாவரம் சுற்றுலா மையம்மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். இங்குள்ள உணவு விடுதி, தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஆய்வு செய்யப்பட்டது.
வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் குடிநீர், சுகாதார வசதி போன்ற வசதிகளை மேம்படுத்தவும், கூடுதலாக எந்தெந்த வசதிகளை செய்யலாம் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன். படகு சவாரி காலையில் தொடங்கும் நேரத்தை முன்னதாகவே தொடங்கவும், மாலையில் படகு சவாரி முடியும் நேரத்தை நீட்டிக்கவும் வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
சுற்றுலா மைய ஊழியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்களா என்றும், உரிய வழிமுறைகள் பின்பற்றப் படுவது குறித்தும் கேட்டறிந்தேன். ஏற்கெனவே இந்தப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியில் விடியல் விழாவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கொண்டு கடல் உணவு திருவிழாவும் நடத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற விழாக்களை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இதைக் கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார். சிதம்பரம் வருவாய் கோட் டாட்சியர்(பொறுப்பு) உதயகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜித்தன், மாவட்ட வன அலுவலர் செல்வம், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார், சுற்றுலா மைய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.