மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை : ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை :  ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், புல்லங்குடியைச் சேந்தவர் சண்முகம் (53). இவருக்கு திருமணமாகி பிரவீன்குமார் (29) என்ற மகன் உள்ள நிலையில் மனைவி இறந்துவிட்டார். அதனால் சண்முகம் அதே பகுதியைச் சேர்ந்த கனகா (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கனகாவின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர் இது தொடர்பாக தனது மகன் பிரவீன்குமாரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து கனகாவைத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே கனகா கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன்பின் மருத்துவர்கள் அனுமதியின்றி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் கனகாவை 22.7.2017-ல் கழுத்தை நெரித்து சண்முகம் உள்ளிட்டோர் கொலை செய்தனர். உடலை தேவிபட்டினம் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கரிமூட்டத்தில் வைத்து எரிக்க இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அறிந்த புல்லங்குடி கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கேணிக்கரை போலீஸாருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சண்முகம், அவரது மகன் பிரவீன்குமார், உறவினர் முருகன் (30) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஏ.சுபத்ரா தீர்ப்பளித்தார். பிரவீன்குமார், முருகனுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in