திருக்குறுங்குடியில் சூறைக்காற்று - 20 ஆயிரம் வாழைகள் சேதம் :

திருக்குறுங்குடியில் சூறைக்காற்று   -  20 ஆயிரம் வாழைகள் சேதம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் கடந்த சில நாட் களாக சூறைக்காற்று வீசுகிறது. இதனால் திருக்குறுங்குடி, மாவடி, மலையடிப்புதூர், ராஜபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிட்டிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். செவ்வாழை, ஏத்தன், ரசகதலி வகைகளைச் சேர்ந்த 8 மாத வாழைகள் குலைதள்ளியிருந்த நிலையில் சாய்ந்துள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, “ஏத்தன் வாழை, செவ்வாழை போன்றவற்றை பல ஏக்கர் அளவில் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு வாழை மரத்தின் பராமரிப்பு செலவு குறைந்தபட்சம் ரூ.150 முதல் ரூ.300 வரை ஆகும். வாழைகள் இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில், சூறைக் காற்றால் சாய்ந்து விழுந்து லட்சக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்நிலையில், வாழைகள் சேதமடைந்த பகுதிகளில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ண மூர்த்தி தலைமை யிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். சார் ஆட்சியர் கூறும்போது, “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in