

கோவை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உட்பட 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோவை, மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் பணிபுரியும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பொறியாளர்கள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் ஆ.லட்சுமணன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வேறு துறை பணி ஒதுக்கப்படவில்லை. மாநகராட்சி செயற்பொறியாளர் பார்வதி வேலூர் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு செயற்பொறியாளரான டி.ஞானவேல், ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதவி செயற்பொறியாளர் கே.சரவணக்குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி எஸ்.ரவிச்சந்திரன் மதுரை மாநகராட்சி ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்ட செயற்பொறியாளராகவும், அங்கு பணியாற்றிய செயற்பொறியாளர் கருப்பாத்தாள் கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட செயற்பொறியாளர் ஆர்.ராமசாமி கோவை மாநகராட்சி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சுன்கரா நியமிக்கப்பட்ட பிறகு, நிர்வாக வசதிக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாநகராட்சி துணை ஆணையராக இருந்த கு.விமல்ராஜை அப்பொறுப்பிலிருந்து ஆணையர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வார்டு சுகாதார ஆய்வாளர் தொடங்கி உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் என பல்வேறு பதவிகளில் உள்ளவர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் தற்போது தலைமை பொறியாளர் உள்ளிட்டோரை அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் லட்சுமணன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் முக்கியப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.