சேலம் கற்பகம் தடுப்பணையில் குளிக்க மக்கள் ஆர்வம் : புது ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை

சேலம் கன்னங்குறிச்சி கற்பகம் தடுப்பணையில் குழந்தைகளுடன் குளித்து மகிழும் பெற்றோர்.		 	   படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் கன்னங்குறிச்சி கற்பகம் தடுப்பணையில் குழந்தைகளுடன் குளித்து மகிழும் பெற்றோர். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள கற்பகம் தடுப்பணையில் குளிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அங்குள்ள புது ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள கற்பகம் என்ற இடத்தில் புது ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்உள்ளது. ஏற்காடு மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீரானது ஓடையாக உருவெடுத்து வனப்பகுதி வழியாக ஓடிவந்து, கற்பகம்தடுப்பணையை கடந்து கன்னங்குறிச்சி புது ஏரியில் கலக்கிறது.

ஏற்காடு அடிவாரம் தொடங்கி புது ஏரி வரை தெளிந்த நீரோட்டம் கொண்ட ஓடையில், கற்பகம் தடுப்பணைப் பகுதி ஆழம் இல்லாத நீரோட்டப் பகுதியாக உள்ளது. சற்று தொலைவில் ஏற்காடு மலைச்சரிவு, சுற்று வட்டாரத்தில் பசுமையான வயல்கள் என இயற்கை எழில்கொஞ்சும் இடமாக கற்பகம் தடுப்பணை உள்ளது.

மழைக்காலத்தில் இந்த ஓடையில் சேலத்தைச் சேர்ந்த மக்கள் அவ்வப்போது வந்து குளித்து மகிழ்வது வழக்கமாக இருந்தது. தற்போது சேலம் மக்களிடையே இந்த தடுப்பணை பிரபலமாகிவிட்டது.

தற்போது, வாரவிடுமுறை நாட்களில் சேலம் மக்கள் நூற்றுக்கணக்கானோர் கற்பகம் தடுப்பணைக்கு குழந்தைகளுடன் வந்து குளித்துச் செல்கின்றனர். மேலும், அருகிலுள்ள புது ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் இடத்திலும் மக்கள் உற்சாகக் குளியல் போடுகின்றனர். இந்நிலையில், புது ஏரியில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடபாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

கற்பகம் தடுப்பணையில் குழந்தைகளுடன் மக்கள் பாதுகாப்பாக குளித்து, விளையாடக்கூடிய இடமாக உள்ளது. எனவே, இந்த நீரோடைப் பகுதியை, மேலும் பாதுகாப்பான, பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும். ஓடையை அடுத்துள்ள புது ஏரியில் படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in