

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வட்டாட்சியர் பெயரில் போலி இலவச வீட்டுமனை பட்டா விநியோகித்த கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அருகே பூங்குடியைச் சேர்ந்த ஹேமலதா, பிரேமலதா ஆகியோர் 2015-ம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு செய்தனர். அப்போது துணை வட்டாட்சியர் ஒருவரின் கார் ஓட்டுநராக இருந்த பனிப்புலன் வயலைச் சேர்ந்த ராஜவினி (36) என்பவர், ஹேம லதா, பிரேமலதா ஆகியோரிடம் இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய இருவரும் ராஜவினியிடம் ரூ.60 ஆயிரம் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு அரசு முத்திரையுடன் வட்டாட்சியர் பெயரில் கையெழுத்திட்டு பட்டா கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தங்களுக்கு கொடுத்த பட்டா போலி எனத் தெரியவந்ததை அடுத்து, ஹேமலதா, பிரேமலதா ஆகியோர் கோட்டாட்சியர் பிரபா கரனிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் புகாரின் பேரில் தேவகோட்டை டவுன் எஸ்ஐ பாலகிருஷ் ணன் வழக்குப் பதிந்து ராஜவினியைக் கைது செய்தார்.