தென்காசியில் 2-வது நாளாக சோதனை: விதிமீறியதாக 412 வழக்குகள் பதிவு  :

தென்காசியில் 2-வது நாளாக சோதனை: விதிமீறியதாக 412 வழக்குகள் பதிவு :

Published on

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் இரண்டாவது நாளாக ரோந்து மற்றும் வாகன சோதனைப் பணியில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்டம் முழுவதும் 78 தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கியுள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்தனர். 89 குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வாகன சோதனையில் ஒரே நாளில் 857 வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதில், மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in