மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க - திருப்பூரில் கூடுதலாக 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி : செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க -  திருப்பூரில் கூடுதலாக 5 மருத்துவமனைகளுக்கு அனுமதி :  செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
Updated on
1 min read

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதமர் மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட 3-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது.

தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் சு.வினீத் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் 4- வது முறையாக கருணாநிதி முதல்வராக பதவியேற்றபோது, ‘வரும் முன் காப்போம்’ எனும் திட்டத்தை ஏற்படுத்தி, மருத்துவமனைகளில் மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல், கடைக்கோடி கிராமங்களுக்கும் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தர விட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் 28 தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது கூடுதலாக 4 அரசு மருத்துவமனைகளிலும், ஒரு தனியார் மருத்துவமனையிலும் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் மொத்தம் 40,178 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காகரூ.92.64 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இத்திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளதால், பலரும் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 27 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகளும், சிறப்பாக பணிபுரிந்த 4 மருத்துவ காப்பீட்டு அலுவலர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in