Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

சேலத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை முடிவு :

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் அதிகமாக கூடும் கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 668 ஆகவும், 8 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 610 பேர் கண்காணிப்பிலும் உள்ளனர். மக்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்காக, நாளொன்றுக்கு 5 ஆயிரத்து 883 நபர்களுக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாத தொடக்கத்தில் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 50 முதல் 60 பேர் வரை தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, தொற்றுப் பரவல் எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் 21-ம் தேதி 77 பேருக்கும் நேற்று முன்தினம் 98 பேருக்கும்

தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மீண்டும் தொற்று பாதிப்பு உயரத் தொடங்கியிருப்பதால், சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியின்றி கூடுவது, முகக் கவசம் அணியாமல் நடமாடுவது என மக்களிடம் அலட்சியம் அதிகரித்துவிட்டது. தற்போது அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், மக்கள் புத்தாடைகள் வாங்குவது, நகைகள், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் செலுத்துகின்றனர். இதனால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

எனவே, இதனைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிப்பது, வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தீவிரப்படுத்த உள்ளோம்.

கடைகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில், வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியுடன் அனுமதிப்பது, வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை, கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றுக்கு ஆளானவர் கண்டறியப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தி, அவர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், இனி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x