Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

சேலம் பெரியார் பல்கலை.யில் - மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி :

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், ‘தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின்’ கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி திட்டத்தை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும் வகையில் மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத்துறை தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழக பல்கலைக்கழகங்களில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இத்திட்டத்தில் கீழ் பட்டதாரி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கிவைத்து பேசியதாவது:

தமிழ்கம் முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக தீனதயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2.66 கோடி ரூபாய் மதிப்பில், 350 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக உயர் கல்வியுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயனர் இடைமுக மென்பொருள் உருவாக்குநர் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்குவதால் இணையதளம் சார்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் பணி வாய்ப்பு இந்த இளைஞர்களுக்கு கிடைக்கும். இதில் 62 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 3 சதவீதம் பழங்குடியினருக்கும், 19 சதவீதம் சிறுபான்மையினருக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தீனதயாள் உபாத்தியாயா கவுசல்யா, யோஜனா திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x