Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

ஊரக உள்ளாட்சி தேர்தல் - நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேட்பு மனு பரிசீலனை :

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 78 பேரும், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 836 பேர், 204 ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,244 பேர், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,713 பேர் என்று, மொத்தம் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 102 பேர், 144 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 878 பேர், 221 ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,355 பேர், 1,905 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,497 பேர் என்று, மொத்தம் 2,284 பதவிகளுக்கு 7,832 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. பரிசீலனையின்போது மனு தாக்கல் செய்தவர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நாளை மாலைக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தை வேட்புமனு தாக்கலுக்கு இறுதிநாள்வரை நடைபெற்றதால். ஒருசில இடங்களில் அதிகாரபூர்வ கட்சி வேட்பாளர்களை எதிர்த்து கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று தெரிகிறது.

வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என்று ஏராளமானோர் ஒன்றிய அலுவலகங்களில் திரண்டிருந்தனர். பாளையங்கோட்டை, மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அதிகமிருந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தல் புகார்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3.69.438 ஆண் வாக்காளர்களும், 3.85.940 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என்று மொத்தம் 7,55,402 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளராக பொ.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, தேர்தல் பார்வையாளரை 72005 87897 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x