Published : 24 Sep 2021 03:24 AM
Last Updated : 24 Sep 2021 03:24 AM

தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று தொடக்கம் :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 204 ஊராட்சி தலைவர், 1731 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 2 கட்டமாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 6-ம் தேதியும், களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 9-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தல் 621 வாக்குப்பதிவு மையங்களிலும், 2-ம் கட்ட தேர்தல் 567 வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவின்போது 5,037 வாக்குப்பதிவு அலுவலர்களும், 2-ம் கட்ட வாக்குப்பதிவின்போது 4,534 வாக்குப்பதிவு அலுவலர்களுமாக மொத்தம் 9,571 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் சுழற்சி முறையில் நடைபெற்றது.

பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியிலும், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்துக்கு சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது. நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு தெற்குவிஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியிலும், பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியத்துக்கு இடைகால் மெரிட் மேல்நிலைப்பள்ளியிலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வள்ளியூர் திருச்சிலுவை பாத்திமா நடுநிலைப்பள்ளியிலும் காலை 10 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு என்று இரு பிரிவுகளாக தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x