ரெடிமேட், காலணி, இரும்புப் பொருட்களுக்கு - ஜிஎஸ்டி 5 சதவீதத்திலிருந்து 18 ஆக உயர்வு : விக்கிரமராஜா கண்டனம்

அரியலூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் பேசுகிறார் அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா.
அரியலூரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டத்தில் பேசுகிறார் அச்சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா.
Updated on
1 min read

ரெடிமேட், காலணிகள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

அரியலூரில் நேற்று நடைபெற்ற பேரமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரெடிமேட், காலணிகள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டியை 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. மேலும், மற்றப் பொருட்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வரி உயர்த்தப்படலாம் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விலைவாசி பெருமளவில் உயர்ந்து, ஏற்கெனவே கரோனா பரவலால் வாங்கும் சக்தியை இழந்துள்ள பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்.

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஆனால், அவ்வாறு எந்தவித கடனுதவிகளும் வழங்கப்படவில்லை.

ஜிஎஸ்டி வரி சோதனை என்ற பெயரில் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனையிடுவது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. இவ்வகையான சோதனைகளை தவிர்க்க வேண்டும். வருங்காலங்களில் ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும்பட்சத்தில் வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in