Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM

வடகிழக்கு பருவமழை குறித்து ஆலோசனை - வெள்ளப் பாதிப்புகளை தடுக்க முன்னேற்பாடுகள் அவசியம் : நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற் பாடு பணிகள் குறித்து ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

வடகிழக்கு மழைக் காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முன்னெச் சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அணைகளில் நீர்வரத்து, இருப்பு மற்றும் நீர்போக்கு விவரங்கள், குளங்கள் மற்றும் கால்வாய்களை கண்காணித்து உடனுக்குடன் அறிக்கை அளிக்க வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய தேவையான சாக்கு, மணல், சவுக்கு கட்டைகள் போன்ற பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைக்க வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படும் ஆற்றோரப் பகுதிவாழ் மக்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டோர் தங்குமிடம், பள்ளிக் கூடங்கள், சமுதாயகூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். குடிநீர் விநியோகம் தடைபடாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவசர கால உதவிக்கு தேவையான மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கால்நடை தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x