Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM

வேலூர் மாவட்டத்துக்கு - 13 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தன : 246 முகாம்களில் செலுத்த ஏற்பாடு

வேலூர்

வேலூர் மாவட்டத்துக்கு 13 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன.

கரோனா தொற்றை தடுக்க மாநில சுகாதாரத்துறை மூலம் பொதுமக்களுக்கு ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த 2 தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை செலுத்திக்கொண்டால் கரோனா தொற்றில் இருந்து அதிக பாதிப்பு இல்லாமல் தப்பிக்கலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துவருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, 18 வயதுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து அனுப்பி வைக்கப்படும் தடுப்பூசிகள் உடனுக்கு உடன்மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 3-வது அலையை எதிர்கொள்ளவும், கரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டு அதை செயல்படுத்தி வருகிறது. கடந்த 12 மற்றும் 19-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதில், ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மத்திய அரசிடம் இருந்து குறைந்த அளவிலேயே கோவாக்சின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வந்தன.

இதனால், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் அதற்கான காலக்கெடு கடந்தும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த முடியாமல் தவித்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவாக் சின் தடுப்பூசியை அதிக அளவில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை மத்திய அரசுக்கு வலியுறுத்தியது. இந்நிலையில், சென்னைக்கு நேற்று முன்தினம் கோவாக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதிலிருந்து மாவட்டம் வாரியாக கோவாக்சின் தடுப்பூசிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூர் மாவட்டத்துக்கு 13 ஆயிரத்து 285 கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன. இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 246 முகாம்களில் கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கின.

முதல் தவணை போட்டுக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஒரு சில முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x