சேலம் ராஜகணபதி கோயிலில் - சதுர்த்தி விழா நிறைவு நாளில் விநாயகருக்கு 1,000 லிட்டர் பாலாபிஷேகம் :

சேலம் ராஜகணபதி கோயிலில் -  சதுர்த்தி விழா நிறைவு  நாளில் விநாயகருக்கு 1,000 லிட்டர் பாலாபிஷேகம்  :
Updated on
1 min read

சதுர்த்தி விழா நிறைவு நாளையொட்டி, சேலம் ராஜகணபதி கோயிலில் நேற்று விநாயகருக்கு ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.

சேலம் தேர் வீதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராஜாகணபதி கோயில் உள்ளது. மிகவும் பிரஸித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தென் தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத அளவுக்கு மூலவர் விநாயகரின் வயிறைச் சுற்றி ஒன்பது நவக்கிரக உருண்டை இருப்பதால், நவக்கிரக தோஷம் உடையவர்கள் இக்கோயிலில் வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராஜகணபதி கோயிலில் கடந்த 12 நாட்களாக விநாகருக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. சதுர்த்தி விழா நிறைவு நாளான நேற்று அதிகாலை முதல் விநாயகருக்கு சிறப்பு யாகங்களும்,. தொடர்ந்து இளநீர், சந்தனம்,தயிர், பஞ்சாமிருதம், விபூதி சொர்ணா அபிஷேகம் என பல்வேறு வாசனை திரவியங்களாலும், ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகமும் நடந்தது.

மேலும், விநாயகருக்கு பட்டாடை உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளாக பக்தகர்கள் பங்கேற்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து விநாயகரை வழிபட்டனர்.

படவிளக்கம்:

சதுர்த்தி விழா நிறைவு நாளையொட்டி, சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகருக்கு ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.

படம்: எஸ்.குரு பிரசாத்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in