Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

கடன் பெற்று தருவதாகக்கூறி விவசாய நிலம் அபகரிப்பு : திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார்

திருப்பூர்

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.4 கோடி மதிப்புள்ள ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத்தரக்கோரி, விவசாயி, தனது மனைவியுடன் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

தாராபுரம் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (67). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (62). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த கோவிந்தசாமியும், லட்சுமியும் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த உளவுத்துறை போலீஸார், பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதுதொடர்பாக கோவிந்தசாமி கூறும்போது ‘‘கடந்த 20 ஆண்டுகளாக, தேங்காய் பருப்பு வியாபாரம் செய்து வருகிறேன். எனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் கனரா வங்கியில் கடன் பெற்றிருந்தேன். தொழில் நலிவடைந்த நிலையில், வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடியை சேர்ந்த நண்பர் ஒருவர், தனது பெயரில் சொத்துகளை மாற்றிக் கொடுத்தால், வேறு வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக என்னிடம் கூறினார்.

இதை நம்பி, எனது சொத்துகளை கடந்த 2017-ல் அவர் பெயருக்கு மாற்றினேன். கடன் பெற்றுத்தராமல், எனது சொத்தை திருப்பூரைச் சேர்ந்த நபருக்கு, கேரள நபர் எழுதிக் கொடுத்துள்ளார். எங்களது வாழ்வாதாரமே இந்த நிலம்தான். இதை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கோவிந்தசாமி மனு அளித்தார்.

பெருந்தொழுவு அங்காளம்மன் நகரை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது ‘‘எங்கள் பகுதியில் 88 வீட்டுமனைகள் உள்ளன. இதில், இரண்டு வீடுகள் கட்டியுள்ளோம். எஞ்சியவர்கள் வீடு கட்டுவதற்கு தயாராக உள்ளனர். எங்கள் பகுதியில் மின் இணைப்புக்கான மின்கம்பங்கள் அமைக்க மின்வாரியம் 16 கம்பங்களை நட்டது. இந்நிலையில் சிலர், தங்களின் சொந்த ஆதாயத்துக்காக எதிர்ப்பு தெரிவித்ததால், நடப்பட்ட மின்கம்பங்கள் அகற்றப்பட்டன. எங்களுக்கு மின் கம்பங்கள் அமைத்து, மின் இணைப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

தமிழ் மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் ‘‘திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டு, சாமுண்டிபுரம் ராஜீவ் நகர் 4-வது வீதியில் சாலை வசதி இன்றி சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். தற்போதுள்ள சாலை மிக மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x