திருப்பூர், கோவை மாவட்டங்களில் - பாலீஷ் போட்டு தருவதாகக்கூறி பெண்களிடம் நகை திருட்டு : பிஹார் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது

திருப்பூர், கோவை மாவட்டங்களில் -  பாலீஷ் போட்டு தருவதாகக்கூறி பெண்களிடம் நகை திருட்டு :  பிஹார் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது
Updated on
1 min read

நகை பாலீஷ் போட்டு தருவதாகக் கூறி நகை திருட்டில் ஈடுபட்ட பிஹார் மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸார் கைது செய்து 44 சவரன் நகையை மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் குழந்தை கவுண்டன்வலசை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரிடம், கடந்த 23-ம் தேதி நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாகக்கூறி, 4 சவரன் 2 கிராம் நகையை வடமாநில இளைஞர்கள் இருவர் திருடிச்சென்றனர். புகாரின்பேரில் காங்கயம் போலீஸார் விசாரித்து வந்தனர். இதே முறையில், அவிநாசிபாளையம் அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தனபிரியா (32) என்பவரிடம் கடந்த 28-ம் தேதி வடமாநில இளைஞர்கள் 2 பேர், 8 சவரன் 4 கிராம் நகைகளை ஏமாற்றி திருடிச் சென்றனர். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரின், பல்லடம் போலீஸார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையத்தில் பதுங்கியிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த மணீஷ்குமார் (33), கந்த்லால்(33) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அளித்த தகவலின்படி, பிஹார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த சுனில்குமார் (37) அஜய்குமார் (39) ஆகியோரை சபூர் போலீஸார் உதவியுடன், தனிப்படை போலீஸார் கைது செய்து, பல்லடம் அழைத்து வந்தனர். விசாரணையில், இவர்கள் 4 பேர் மீதும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகள், கோவை மாவட்டத்தில் இரண்டு வழக்குகள், ஈரோடு மாவட்டத்தில் 3 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 வழக்குகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வழக்கு என தொடர்புடைய வழக்குகளில் 44 சவரன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in