Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

3,200 ஆண்டுகளுக்கு முந்தைய - முதுமக்கள் தாழி, கீறல் குறியீடுகள் முனைவென்றியில் கண்டெடுப்பு :

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே முனைவென்றியில் 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள், கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இப்பகுதியை கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான முனைவர் ந.ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

முனைவென்றி கொடுமணலுக்கு இணையான ஊர். இங்குள்ள வயல்வெளி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண்மாய் பகுதிகளில் 100 ஏக்கரில் பெருங்கற்கால தொல்சான்றுகள் பரவிக் கிடக்கின்றன.

இங்கு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள், கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடுகள், செங்கல் வட்டுச்சில்கள், சிறிய கலயங்கள், கற் கருவிகள், மனித எலும்புகள் காணப்படுகின்றன.

இந்த தொல்பொருட்களை ஆய்வு செய்ததில் அவை 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி, சிவகளை அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் பல இங்கும் காணப்படுகின்றன.

இப்பகுதியை தொல்லியல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்தால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைப்பதோடு, தமிழனின் பெருமையை உலகறியச் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x