ஊரக வேலை உறுதி திட்டத்தில் - முறைகேடு நடப்பதாக புகார் : ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்

ஊரக வேலை உறுதி திட்டத்தில்  -  முறைகேடு நடப்பதாக புகார்  :  ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்
Updated on
1 min read

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் வேல்முருகன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மேனகா, கருத்தபிள்ளையூர் கிளை விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர், நிர்வாகிகள் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், “கடையம் ஊராட்சி ஒன்றியம் மேல ஆம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுமார் 150 தொழிலாளர்கள் கால்வாய் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களில் சுமார் 40 பேருக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 6 நாட்களுக்கு 600 ரூபாய் மட்டும் வங்கிக் கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மீதி 110 தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக ஊராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை.

வேலை பார்த்த அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு நிர்ணயித்த தினக்கூலி ரூ.273 வீதம் வழங்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும், புதிய அட்டை பதிய ரூ.1000, பழைய அட்டை புதுப்பிக்க ரூ.500 லஞ்சம் கேட்கும் மேல ஆம்பூர் ஊராட்சி மீதும், அதற்கு துணைபோகும் கடையம் ஒன்றிய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in