

சேலம் மாவட்டத்துக்கு ஒரு லட்சம் டோஸ் என்ற இலக்கை மையப்படுத்தி, கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி 2-வது சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் மொத்தம்1,356 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்துக்கு 79 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்ட தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் ஆர்வமுடன் வந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதனிடையே, சேலம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் சேலம் மணக்காடு மாநகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், எம்பி பார்த்திபன், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், சதாசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி உள்பட பலர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சத்து 98 ஆயிரத்து 204 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் தவணையாக 15 லட்சத்து 18 ஆயிரத்து 166 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, 54 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. 2-வது தவணையாக 4 லட்சத்து 43 ஆயிரத்து 868 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு 16 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. சேலத்துக்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்டை மாவட்டமான கோவையில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 75 சதவீதமாகவும், 2-வது தவணை எண்ணிக்கை 25 சதவீதமாகவும் உள்ளது. மிக விரைவாக அந்த இலக்கை சேலம் மாவட்டம்எட்டுவதற்கு போதிய தடுப்பூசி வழங்கப்படும்.
ஒரு லட்சம் என்ற இலக்கை மையப்படுத்தி, இனி சேலம் மாவட்டத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.