காவிரி ஆற்றின் குறுக்கே மருதூரில் - கதவணை கட்ட இடம் தேர்வு செய்ய அமைச்சர் ஆய்வு :

காவிரி ஆற்றின் குறுக்கே மருதூரில்  -  கதவணை கட்ட இடம் தேர்வு செய்ய அமைச்சர் ஆய்வு  :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அமைச்சர் கூறியது: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் வடக்குமருதூர், திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் உமையாள்புரத்தை இணைக்கும் வகையில் பேருந்துகள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியுடன் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்கும் வகையில் கதவணை அமைக்கப்படவுள்ளது. இதற்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த கதவணை மூலம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கவும், குடிநீர் கிணறுகள் செறிவூட்டப்பட்டு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கவும், வாய்க்கால்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பாசனம் பெறும் 3,750 ஏக்கர் நிலங்களுக்கு தேவையான பாசன வசதியும் உறுதி செய்யப்படும் என்றார்.

அப்போது, குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம், குளித்தலை கோட்டாட்சியர் (பொ) தெட்சிணாமூர்த்தி, பொதுப்பணித் துறை காவிரி ஆறு பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், உதவி பொறியாளர் செங்கல்வராயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in