

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி நகை அடகு வைக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் மல்லசமுத்திரம் அருகே பீமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 2 தங்க வளையல்கள் அடகு வைத்துள்ளார்.
இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட நகைக்கு வழங்கப்பட்ட கடன் அரசின் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் சம்பந்தப்பட்ட வளையல்களை சோதனை செய்து பார்த்ததில் அவை போலி நகை எனத் தெரியவந்தது.
இதுபோல போலி நகைகள் அடகு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் உத்தரவின்பேரில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று காலை முதல் தள்ளுபடி கடன் நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.