

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 17 ஆயிரத்து 899 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14 ஆயிரத்து 808 கனஅடியாக குறைந்தது.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17 ஆயிரத்து 899 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று விநாடிக்கு 14 ஆயிரத்து 808 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி, மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்துக்கான நீர் திறப்பை விட, அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துவிட்டதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கி உள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 74.27 அடியாக இருந்த நிலையில், நேற்று 74.07 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 36.29 டிஎம்சி-யாக உள்ளது.