Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

ஈரோடு மாவட்டம் கோபியில் கனமழை - அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் :

கோபி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக அரசு சார்பில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கொள்முதல் நிலையங்கள் திறந்த வெளியில் அமைந்துள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதில் பல்வேறு சிரமங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் கோபி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

நனைந்த நெல் மூட்டைகளை உலர்த்த இடம் இல்லாததால் விவசாயிகள் டிராக்டர் மூலம் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் கூடுதலாக செலவு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கூடுதல் இடவசதியுடன் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் உள்ளது.

கோபி பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x