

கடையநல்லூர் அருகே நேற்று மீண்டும் 4 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் அவை அங்கிருந்து விரட்டப்ப ட்டன. யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் விவசாயி கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடைய நல்லூர் அருகே வடகரையைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து மா, தென்னை, வாழை, நெல் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள், வேலிகள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த மாதம் வடகரையில் 2 யானைகள் புகுந்தன. நூற்றுக்கணக்கானோர் திரண்டு அவற்றை விரட்டினர்.
பட்டாசு வெடித்தனர்
இதுகுறித்து விவசாயி ஜாகிர் உசேன் கூறும்போது, “வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேல் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 15 தென்னைகள், ஆயிரம் வாழைகள், 2 ஏக்கர் நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு புகார்கள் கூறியும் யானைகளை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுவரை பயிர்கள் மட்டுமே சேதமடைந்த நிலையில் தற்போது உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. யானைகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகளைத் திரட்டி ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.