

திருநெல்வேலி அருகே பழிக்குப்பழியாக விவசாயி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நீடிக்கிறது. அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் முப்பிடாதியம்மன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மகன் மாரியப்பன் (32). நேற்று அதிகாலையில் கோபாலசமுத்திரம் செங்குளம் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் மறைந்திருந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சூழ்ந்து, சராமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த வெட்டுப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது தலையை அக்கும்பல் துண்டித்து எடுத்துச் சென்று, கடந்த 2 நாட்களுக்குமுன் அப்பகுதியில் சங்கரசுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் வீசிவிட்டு தப்பியது.
சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார், மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர். மாரியப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்குமுன் முன்னீர்பள்ளம் அருகே திடியூர் வடுவூர்பட்டி காட்டுப்பகுதியில் சங்கரசுப்பிரமணியன் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கோபாலசமுத்திரம் பகுதியில் இரு தரப்பினரிடையே நிலவும் மோதல் காரணமாக அடுத்தடுத்து 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.