

கூட்டுறவுத் துறை சார்பில் பொது விநியோக திட்டப் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் வகையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி மேம்பாட்டுப் பயிற்சி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
பயிற்சியை ஆட்சியர் கார்மேகம் தொடங்கிவைத்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டு பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 1,156 முழுநேர ரேஷன் கடைகள், 437 பகுதிநேர ரேஷன் கடைகள் உள்ளிட்ட 1,593 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகளில் மொத்தம் 1,017 விற்பனையாளர்கள் பணிபுரிகின்றனர்.
ரேஷன் கடை ஊழியர்களுக் கான பணி மேம்பாட்டு ஒரு நாள் பயிற்சி சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி ஐந்து கட்டங்களாக நடக்கவுள்ளன. இப்பயிற்சியில் முதல்கட்டத்தில் 115 பணியாளர்களுக்கு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பொது விநியோகத் திட்ட பணிகளை சிறப்பாக நடை முறைப்படுத்தவும், ரேஷன் கடைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிப்பதற்கான முறை குறித்தும், பொதுமக்களிடம் நட்புரிமையாகவும், மரியாதையாகவும், கனிவுடனும் நடந்து கொள்வது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், மின்னணு விற்பனை முனைய கருவியை முறையாக பயன்படுத்துதல், பயோ மெட்ரிக் விற்பனை முறை, கரோனா கால சூழ்நிலைகளில் பொதுமக்களை கையாளுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், பணிபுரியும் இடத்தில் விற்பனையாளர்கள் மனவளத்தை பேணி இயல்பாக பணிபுரிய யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில், சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சரவணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் தமிழ் நங்கை, சேலம் சரக துணைப் பதிவாளர் யோகவிஷ்ணு, சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.