

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பி.என்.தர் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியர் தர் செய்தியாளர்களிடம் கூறியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு கட்டங்களாக 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவி இடங்களுக்கு 1,889 வாக்குச்சாவடி மையங்களில் 4,83,841 ஆண் வாக்காளர்கள், 4,77,887 பெண் வாக்காளர்கள், 186 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 9,61,914 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
முதற்கட்டமாக அக்டோபர் 6-ம் தேதி திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 7,751 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 9-ம் தேதி 2-ம் கட்டமாக சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்காக 7,773 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக மாவட்டத்தில் 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 549 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 10,384 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என்ற வீதத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 9 வாக்கு எண்ணிக்கை மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றிட 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 180 பகுதிகளில் உள்ள 390 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பும் தேர்தல் நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட வுள்ளனர். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள, புகார்களை தெரிவித்திட கட்டணமில்லா 18004258510 என்ற தொலைபேசி சேவை எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.