கோயில் நிலங்களில் வசிப்போருக்கு - பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை : அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி

கோயில் நிலங்களில் வசிப்போருக்கு -  பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை :   அமைச்சர் பி.கே.சேகர் பாபு உறுதி
Updated on
1 min read

கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் பேச்சுக்கே தற்போது இடமில்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை(செப்.16) நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, கே.என்.நேரு ஆகியோர் நேற்று கோயிலில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் யானை குளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியையும், அதில் யானை அகிலா குளிப்பதையும் பார்வையிட்டனர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியது:

கோயில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இதற்கான ஆணை வழங்கப்படவுள்ளது.

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் புகார் அளிக்க வேண்டும் என்றிருந்த நிலை, தற்போது சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ‘இறைவன் சொத்து இறைவனுக்கே’ என்ற அடிப்படையில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அறங்காவலர் குழு நியமிக்கப்படாத கோயில்களில் பணிகள் ஒரு நாள்கூட பாதிக்கப்படாத வகையில் தக்கார் நியமிக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர் குழு நியமனம் தொடர்பான சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குழுவின் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டுதலின்படி சிதிலமடைந்து கிடந்த இந்து சமய அறநிலையத் துறையைச் சீர்படுத்தி வருகிறோம்.கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் பேச்சுக்கே தற்போது இடமில்லை என்றார்.

ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் அ.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, எஸ்.கதிரவன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in