Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

அசைவ உணவகங்களில் சோதனை - சேலத்தில் 40 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் : உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை

சேலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அசைவ உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், 40 கிலோ தரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார். மேலும், பலர் உடல் உபாதைக்கு ஆளாகினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி, புஷ்பராஜ், சிவலிங்கம் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் சேலத்தில் உள்ள பிரபல அசைவ உணவகங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், 4 உணவகங்களில் ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி ஆகியவை குளிர்சாதனப் பெட்டியில் தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 40 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக உணவக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:

சேலத்தில் நடந்த சோதனையில் பழைய ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி சுகாதார பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்தது.

மேலும், குளிர் சாதனப் பெட்டியில் நேரடியாக வைக்கப்பட்டிருந்த இறைச்சி, உணவுச் சாயம் தடவப்பட்ட இறைச்சி ஆகியவை கண்டுபிடிக் கப்பட்டது.

தொடர்ந்து, 4 கடைகளில் இருந்த மொத்தம் 40 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, அக்கடைக்காரர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இறைச்சியை பாதுகாப்பாக வைப்பது குறித்து, உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உணவுப் பொருட்கள், இறைச்சி ஆகியவற்றில் கலப்படம், தரமற்ற உற்பத்தி உள்ளிட்டவை கண்டறியப்பட்டால், விற்பனையாளர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் மேற் கொள்ளப்படும்.

சேலம் மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள உணவகங் களிலும் திடீர் சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x