Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

திருச்சி, கரூர் மாவட்டங்களில் - வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு : முறையீடுகள், கோரிக்கைகளை தெரிவிக்க அழைப்பு

திருச்சி, கரூர் மாவட்டங்களில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பான முறையீடு, கோரிக்கைகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நேற்று வெளியிட்டார். 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மணப்பாறையில் 324, ரங்கத்தில் 339, திருச்சி மேற்கில் 271, திருச்சி கிழக்கில் 258, திருவெறும்பூரில் 294, லால்குடியில் 249, மண்ணச்சநல்லூரில் 273, முசிறியில் 255, துறையூர் (தனி) தொகுதியில் 268 என மொத்தம் 2,531 வாக்குச்சாவடிகள் உள்ளன.

வாக்குச்சாவடிகள் தொடர்பாக பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கட்டிட மாற்றம், இடமாற்றம் சம்பந்தப்பட்ட முறையீடுகள் ஏதும் இருப்பின், செப்.25-ம் தேதிக்குள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியின்போது மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், திருச்சி கோட்டாட்சியர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல, கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்யும் வகையில் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை ஆட்சியர் த.பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.

பின்னர், ஆட்சியர் தெரிவித்தது:

கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,032 வாக்குச்சாவடி மையங்கள் உள்ள நிலையில், வார்டு மறுவரையறையில் வாக்குச்சாவடி மையங்களை பிரித்து, புதிய வாக்குச்சாவடி மையங்களை உருவாக்கும் வகையில் 1,040 வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது.

அதன்படி, சட்டப்பேரவைத் தொகுதிகள் அடிப்படையில் அரவக்குறிச்சியில் 2, கரூரில் 4, கிருஷ்ணராயபுரத்தில் 2 என மொத்தம் 8 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக ஆட்சியர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படும். இதுதொடர்பான தங்களின் முறையீடுகள், கோரிக்கைகளை செப்.20-ம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், வாக்குச்சாவடி மறுவரையறை தொடர்பாக ஆட்சியர் தலைமையில் செப்.23-ம் தேதி மாலை 4 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் சைபுதீன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பிரபு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x