தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற லால்குடி அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு :

தேசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற லால்குடி அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு :

Published on

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் ஆறுபடையப்பன் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

லால்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தச்சுத் தொழிலாளி. இவரது மகன் ஏ.ஆறுபடையப்பன். இவர், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை புலவர் பட்டப் படிப்பு (பி.லிட்) முடித்து விட்டு, தற்போது முதுநிலை பட்ட வகுப்பில் சேர்ந்துள்ளார்.

இவர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த மாதம் இளையோர் ஆசிய விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட 4-வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 19 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நேபாள் இளையோர் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு அக்டோபர் மாதம் நடத்தவுள்ள இன்டோ- நேபாள் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த வீரர் ஆறுபடையப்பனை கல்லூரி முதல்வர் கி.மாரியம்மாள் பாராட்டினார். இந்த நிகழ்வில் தமிழ்த்துறைத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in