Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

தென் மாவட்டங்களில் ஒரே நாளில் 2.67 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

கரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து, 951 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.

இந்த முகாம்களில், 62 ஆயிரத்து 830 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 12 ஆயிரத்து 690 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 75 ஆயிரத்து 520 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதேபோல், தென்காசி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து 614 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், 41 ஆயிரத்து 554 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 7 ஆயிரத்து 126 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என, மொத்தம் 48 ஆயிரத்து 680 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 805 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், 50 நடமாடும் வாகனங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி முகாமை அமைச்சர், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 39,654 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 10,822 பேருக்கும் என மொத்தம் 50,476 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுபோல் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 19,147 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 244 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 24,391 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 74,867 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 625 மையங்களில் மாலை வரை நடந்த தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 68,346 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 11,01,004 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 124 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 58,961 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 56,759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x