Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

ஜோலார்பேட்டை அருகே பால் கூட்டுறவு சங்கத்தில் - நிர்வாக குழுவை கலைக்க வலியுறுத்தி சாலை மறியல் :

ஜோலார்பேட்டை-புத்துக்கோயில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே பால் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை கலைத்துவிட்டு, புதிய நிர்வாகி களை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ‘காவேரிப்பட்டு பால் கூட்டுறவு சங்கம்’ செயல்பட்டு வருகிறது. இதில், ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகக்குழுத் தலைவராக கோபு என்பவரும், செயலாளராக (பொறுப்பு) ஆஞ்சி என்பவர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு பால் கூட்டுறவு சங்கத்துக்கு ‘பால் கேன்கள்’ வாங்கியதில் ரூ.42 ஆயிரம் வரை கையாடல் செய்யப்பட்டதாகவும், பால் விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.3 லட்சத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், சங்கத் தலைவர் கோபு கையாடல் செய்யப்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கூட்டுறவு சரக முதுநிலை அலுவலர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தி ருப்பது தெரியவந்தது. குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சங்கத்தின் நிகர லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 0.50 பைசா வழங்குவதாக கணக்கு எழுதி, பால் உற்பத்தியாளர்களுக்கு 0.30 பைசா மட்டும் வழங்கி 0.20 பைசா கையாடல் செய்ததின் மூலம் பல லட்சம் ரூபாய் பால் கூட்டுறவு சங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சங்கத் தலைவர் கோபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஜோலார் பேட்டை அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பால் கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணி யாற்றிய போது நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அவர்களின் முறைகேடுகளை தட்டிக்கேட்டதால் அவரை சங்க நிர்வாக குழுவினர் பணி நீக்கம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விஜய குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்பதால் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பால் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவினருக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ஏற்காத பால் கூட்டுறவு சங்கத்தினர் விஜயகுமாரை பணியில் சேர்க் காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தி யாளர்கள் ஜோலார்பேட்டை - புத்துக்கோயில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, முறைகேடுகளில் ஈடுபட்டு கூட்டுறவு சங்கத்துக்கு சேர வேண்டிய லட்சணக்காண பணத்தை கையாடல் செய்த நிர்வாகக்குழுவை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி புதிய நிர்வாகக்குழுவினரை தேர்வு செய்ய வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட அலுவலக உதவி யாளர் விஜயகுமாரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

இதனால், அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கலந்து பேசி சுமூக முடிவு எடுப்பதாக காவல் துறையினர் வாக்குறுதியளித்தனர். இதனையேற்ற பால் உற்பத்தி யாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x