பள்ளி மாணவர்கள் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்யக்கோரி குமாரபாளையம் காவிரி நகர் பகுதியில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவர்கள் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்யக்கோரி குமாரபாளையம் காவிரி நகர் பகுதியில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் மாணவர்கள் மூலம் போதைப்பொருட்கள் விற்பனை : கும்பலை கைது செய்யக்கோரி மக்கள் மறியல்

Published on

குமாரபாளையம் காவிரி நகர் காந்தியடிகள் தெருவில் காவிரி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளி மாணவர்களை வைத்து மது, கஞ்சா விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதே நபர்கள் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்களையும் ஆபாச வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ராஜா (40) என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர்கள் ராஜாவை தாக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் புதிய காவிரி பாலம் பிரிவு சாலையில் நேற்று மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிறுவர்களை வைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து வந்த குமாரபாளையம் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று மக்கள் சாலை மறியலைக்கைவிட்டுக் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in