கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு : 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி அணை சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2-ம் தேதி அணை நீர்மட்டம் 47.95 அடியாக இருந்தது.
நீர்வரத்து விநாடிக்கு 739 கனஅடியாக இருந்தது. கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 52 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் நேற்று காலை 50 அடியானது.
அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 417 கனஅடியாக இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணை நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் எந்நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வெளியேற்றப்படும் என்றும், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, “அணைக்கு நீர்வரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர்வரத்து விநாடிக்கு 417 கனஅடியாக உள்ளது. இதேபோல, அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு வலது மற்றும் இடது புறக்கால்வாய் வழியாக விநாடிக்கு 177 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது” என்றனர்.
