

மத்திய அரசு ரூ.10,683 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதற்கு ஜவுளித் தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் (ஐடிடிஏ) தலைவரும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) துணைத் தலைவருமான எஸ்.கே.சுந்தரராமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அமைச்சரவை பிஎல்ஐ எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, செயற்கை பஞ்சினாலான மதிப்பு கூட்டு ஜவுளி ஏற்றுமதிக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இதில் செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்த 42 வகையான ஜவுளி ஆடைகளும், 14 வகையான துணிகளும் மற்றும் 10 வகையான தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களும் அடங்கும்.
மத்திய அரசு ரூ.10,683 கோடிக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் ரூ.19 ஆயிரம் கோடிக்கு புதியமூலதனத்தையும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் வியாபாரத்தையும், அதன் மூலம் 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும்.
மேலும் இது, செயற்கை பஞ்சில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியாளர்களின் தொழில் வரலாற்றில் ஒரு மைல்கல். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். சைமா செயலாளர் கே.செல்வராஜு உடனிருந்தார்.
ஜவுளித் தொழில் கூட்டமைப்பு
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்