

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி ஊனந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக வருவாய் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாமக்கல் கோட்டாட்சியர் கோட்டைக்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் (33), அவரது மனைவி சத்தியா (28), மகள் சுக்ரியா (11), மகன்கள் சதீஷ் (8), லோகேஷ் (5), செல்வராஜ் (28), அவரது மனைவி பாஞ்சாலி (25), மகள் நாகலட்சுமி (7), முருகன் (33), அவரது மனைவி செல்வி (28), முருகனின் தங்கை சந்தியா (21) உள்ளிட்டோர் அங்கு பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
அனைவரும் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 11 பேரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், சூளை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.