Published : 09 Sep 2021 03:16 AM
Last Updated : 09 Sep 2021 03:16 AM
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள், பணியாளர்கள் வரும் 11-ம் தேதிக்குள் (நாளை மறுதினம்) தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறு வியா பாரிகள், சாலையோர வியா பாரிகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள், பழக்கடைகள், உணவகம், தேநீர், மளிகைக் கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ், நகைக்கடைகள், அடகு கடைகள், அரிசி கடைகள் என எதுவாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள், கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவுறுத் தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி ஊழி யர்கள் திருப்பத்தூர் பஜார் பகுதி, மார்க்கெட் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வியாபாரிகள் முன்வரவேண்டும். அதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்று வருவதாக விழிப்புணர்வை நேற்று ஏற்படுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர் களிடம் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் கூறும் போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் அனைத்து வகை யான வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.
இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் வரும் 11-ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 5 மணிக்குள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாமில் வியாபாரிகள் தங்கள் ஊழியர்களுடன் கலந்து கொண்டு ஆதார் எண், செல்போன் எண்ணை வழங்கி 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். திங்கள்கிழமை முதல் நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக ஆய்வுக்கு வரும்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை அவர்களிடம் வியாபாரிகள் காட்ட வேண்டும்.
இல்லையென்றால், அந்த கடையை மூடி வைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க ஒவ்வொரு வியாபாரியும் சமூக அக்கறையுடன், தங்களது பாதுகாப்பையும், வாடிக்கையாளர்களின் பாது காப்பை உணர்ந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT