Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM

கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் - உயிரிழந்த பெண்ணின் வாரிசுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கல் :

சுவர் இடிந்து உயிரிழந்த அண்ணியம்மாளின் மகன் ராகுல்காந்திக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகைக்கான ஆணையை வழங்கிய டி.ஆர்.ஓ., தங்கைய்யாபாண்டியன்.

திருப்பத்தூர்

கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மகனுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத்தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நேற்று வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம், கிரிச முத்திரம் அடுத்த புருஷோத்தம குப்பம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் அண்ணியம்மாள்(42). இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் பெய்த கனமழையால் அண்ணியம்மாள் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, இயற்கைப் பேரழிவுகளால் உயிரிழந்த அண்ணியம்மாளின் மகன் ராகுல்காந்தி (13) என்பவருக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் தலைமை வகித்து, உயிரிழந்த அண்ணியம்மாளின் மகன் ராகுல்காந்தியின் வங்கி சேமிப்பு கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் ரூ.4 லட்சம் தொகையை வரவு வைக்கும் ஆணையை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) விஜயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லட்சுமி, பேரழிவு மேலாண்மை வட்டாட்சியர் பிரியா, வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x