விழுப்புரத்தில் ஊட்டச்சத்து கண்காட்சி :

பெண் பயனாளி ஒருவருக்கு இரும்பு சத்து, புரதச் சத்து நிறைந்த பெட்டகத்தை ஆட்சியர் மோகன்  வழங்குகிறார்.
பெண் பயனாளி ஒருவருக்கு இரும்பு சத்து, புரதச் சத்து நிறைந்த பெட்டகத்தை ஆட்சியர் மோகன் வழங்குகிறார்.
Updated on
1 min read

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று விழுப்புரம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து சம்மந்தமான விளக்க கண்காட்சியை ஆட்சியர் மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் மாதிரி அங்கன்வாடி மையம், புரத சத்து நிறைந்த உணவு,இரும்பு சத்து நிறைந்த உணவு, விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ நிறைந்த உணவு, மூலிகைகள், நாட்டு காய்கறி விதைகள், சிறு தானியங்கள் மூலம் செய்யப்படும் திண்பண்டங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. மேலும் கண்காட்சியின் ஒரு பகுதியாக ரத்த சோகை உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து மற்றும் புரதம் நிறைந்த பெட்டகம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புரதம் மற்றும் சக்தி வாய்ந்த உணவுகள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நோக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,821 அங்கன்வாடி மையங்கள் மூலம் 15,327 கர்ப்பிணி பெண்கள், 10,273 பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 5 வயது வரை 1,02,355 குழந்தைகளுக்கு தற்போது ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in