

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தில் வசிப்பவர் பாபு. இவரது மனைவி கோகிலதீபா(34). இவர், தனது தந்தையின் ஏடிஎம் கார்டு மூலமாக, செங்கத்தில் உள்ள ஒருஏடிஎம் இயந்திரத்தில் கடந்த 1-ம் தேதி பணம் எடுக்க சென்றுள்ளார். அவருக்கு, ஏடிஎம் இயந்திரத் தில் இருந்து பணம் எடுக்க தெரியாததால், அருகில் இருந்த 25 வயது இளைஞரின் உதவியை நாடியுள்ளார்.
அதன்படி அந்த இளைஞர், கோகிலதீபாவிடம் இருந்து ஏடிஎம் அட்டையை பெற்று, இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றதாகவும், பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என கூறி அட்டையை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
இந்நிலையில், அவரது தந்தையின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி இரண்டு முறை தலா ரூ.9,500 மற்றும் ஒரு முறை ரூ.ஆயிரம் என ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக, செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதன் பிறகு, ஏடிஎம் அட்டையை பார்த்த போது, போலியான அட்டையை இளைஞர் கொடுத்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளை வைத்துஇளைஞரை தேடி வந்தனர். அதில், கீழ்பென்னாத்தூர் அடுத்த எரும்பூண்டி கிராமத்தில் வசிக்கும் மாசிலாமணி மகன் நவீன்குமார்(27) என்பதும், ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியானது. இதையடுத்து, செங்கத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் முன்பு நின்றிருந்த நவீன்குமாரை காவல்துறையினர் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4,00,100 மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “நவீன்குமார் மீது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து கொடுப்பது போல் நடித்து பணத்தை பறித்ததாக கடந்த 2019-ம் ஆண்டு 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தி.மலை, செங்கம் மற்றும் போளூர் பகுதிகளில் ஏடிஎம் மோசடி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன” என்றனர்.