

ஏற்காட்டில் நேற்று முன்தினம் 127.6 மிமீ மழை பதிவானது. தொடர் மழை காரணமாக கிள்ளியூர் அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது.
வெப்பச்சலனம் காரணமாக சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 127.60 மிமீ மழை பதிவானது. இதனால், ஏற்காடு மலையில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் புதிதாக உருவாகியுள்ளது. இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
ஏற்காடு கிள்ளியூர் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதனிடையே, ஏற்காடு மலையில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் காரணமாக, சேலம் மூக்கனேரி நிரம்பி உபரிநீர் செங்கல் அணை வழியாக திருமணிமுத்தாற்றில் கலந்து வருகிறது.
இதனால், திருமணிமுத்தாற்றில் இருந்த கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றில் செந்நிறமாக நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை அடுத்துள்ள கருங்காலி ஓடை, புது ஏரியை அடுத்துள்ள கற்பகம் தடுப்பணை ஆகியவற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சங்ககிரி 17, மேட்டூர் 15.8, சேலம் 13.20, ஆத்தூர் 11.40, காடையாம்பட்டி 6, கெங்கவல்லி, கரியகோவிலில் தலா 5, ஆனைமடுவு, வாழப்பாடி, ஓமலூரில் தலா 4, எடப்பாடியில் 3, பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 மிமீ மழை பதிவானது.