

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, பசுங்கன்றினை வேட்டையாடியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில், தொட்டகாஜனூர், பீம்ராஜ் நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் செயல்படாமல் உள்ள கல் குவாரியில் பதுங்கியுள்ள சிறுத்தை ஒன்று, விவசாயிகளின் தோட்டத்தில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி, தனது தோட்டத்தில் ஏழு மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த சிறுத்தை ஒன்று, பசுங்கன்றினை கொன்று சாப்பிட்டுவிட்டு, வனத்திற்குள் சென்றுள்ளது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர் சிறுத்தை என்பதை உறுதிப்படுத்தினர். விவசாய நிலங்களுக்குள் நுழையும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.